கோழி தீவனத்தில் வெப்ப அயற்சி நீக்க மருந்துகளை சேர்க்க வேண்டும்


கோழி தீவனத்தில் வெப்ப அயற்சி நீக்க மருந்துகளை சேர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Feb 2023 7:30 PM GMT (Updated: 14 Feb 2023 7:30 PM GMT)
நாமக்கல்

கோழி தீவனத்தில் வெப்ப அயற்சி நீக்க மருந்துகளை சேர்க்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

அடுத்த 3 நாட்கள் வானம் தெளிவாக காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 60.8 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு 6, 8, 8 கி.மீ. வேகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும்.

கோழிகளுக்கு அயற்சி

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில், தற்போது நிலவி வரும் குறைந்த இரவு வெப்பமும், அதிகரித்து வரும் பகல் வெப்பமும் கோழிகளுக்கு மிகுந்த அயற்சியை ஏற்படுத்த வல்லது. குறைந்த வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில், அதிக தீவனம் எடுக்க நேரிடும். பகலில் அதிக வெப்பம். இதற்கு நேர்மாறாக அயற்சியை ஏற்படுத்தி, எடை அதிகரித்த கோழிகளில் இறப்பை தூண்டிவிடக்கூடியது.

ஆதலால் இருவேறு விதமான வெப்ப அளவுகளை எதிர்கொள்ளும் வகையில், தீவனத்தில் வெப்ப அயற்சி நீக்க மருந்துகளை குறிப்பாக, வைட்டமின் சி மற்றும் கோலின் குளோரைடு சேர்த்து வர வேண்டும். மேலும் கோடைக்காலம் விரைவில் வரும் என்பதால், கோழிப்பண்ணைகளின் நீர் ஆதாரங்கள், நீர் குழாய்கள், நீர் தெளிப்பான்கள் மற்றும் நிப்பில்களில் அடைப்பை நீக்கி தயாராக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story