மாவட்ட தலைநகரங்களில் வரும் 4-ந் தேதி இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி அறிவிப்பு


மாவட்ட தலைநகரங்களில் வரும் 4-ந் தேதி இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி அறிவிப்பு
x

மாவட்ட தலைநகரங்களில் வரும் 4-ந் தேதி இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கி.வீரமணி அறிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தி எதிர்ப்பு என்பது இன்று நேற்று நடைபெறுவதல்ல. உண்மையைச் சொல்லப்போனால், வரலாற்று நெடுக நடைபெற்று வரும் ஆரிய - திராவிடப் போராட்டத்தின் உள்ளடக்கமான கூறு என்று இதனைக் கூற வேண்டும்.

1937-ல் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் இடையிடையே மத்திய அரசுகளின் இந்தித் திணிப்பின் காரணமாகப் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் கொடுத்த அறிக்கை மூலம் மீண்டும் இந்தி திணிப்பு வெளிப்பட்டுள்ளது.

இதனால், இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பல மாநிலங்களிலும், இந்தி எதிர்ப்பு எரிமலை நெருப்பைக் கக்க ஆரம்பித்துவிட்டது. இந்திக்கு எதிராக இந்தியா எங்கும் வெடித்துக் கிளம்பும் போக்கை மத்திய பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ளத் தவறினால், அதன் விளைவு விபரீதமாகி விடும். கடும் விலையைக் கொடுக்க நேரிடும்.

திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நவம்பர் 4-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் அறவழிப் போராட்டமாக நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story