தியாகதுருகத்தில்போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்
தியாகதுருகத்தில் போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதையொட்டி நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே போதை பொருட்கள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலமானது பள்ளியில் இருந்து புறப்பட்டு தியாகதுருகம் கடைவீதி, வணிக வைசியர் தெரு, குளத்து மேட்டு தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.
முன்னதாக பள்ளி மைதானத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் போதை பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், உதவி ஆணையர் ராஜவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்க அலுவலர் சுப்பிரமணி, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.