புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
நெல்லையில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நெல்லையில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
உறுதிமொழி
உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து புகையிலைக்கு எதிராக கையெழுத்திடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு கோட்டக்கலால் அலுவலர் இசக்கிபாண்டி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உதவி ஆணையர் ஆவுடையப்பன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
விழிப்புணர்வு பேரணி
பொதுசுகாதாரத்துறை சார்பில் பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலையில் இருந்து புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணியை சுகாதார பணிகள் துறை இயக்குனரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி, தெற்கு கடைவீதி வழியாக மாநகர காவல் கட்டுப்பாட்டுஅறை அலுவலகம் வரை சென்றது. புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை சித்தரிக்கும் வகையிலான கருப்பொருட்களை கையில் ஏந்தியபடியும், விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியும் விழிப்புணர்வு பேரணி சென்றது. பேரணியில் ஆய்வக நுட்பனர் படிப்பு மேற்கொள்ளும் மாணவ-மாணவிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மனநலம் மற்றும் போதை மறுவாழ்வு துறை, நெஞ்சகநோய் துறை மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை டீன் ரேவதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், மனநலம்- போதை மறுவாழ்வுத்துறை தலைவர் ரமேஷ் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை டவுன் தொண்டர் சன்னதி அருகே உள்ள சுகாதார அலகு அலுவலகத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ முன்னிலையில் புகையிலை ஒழிப்பு உறுதி மொழி ஏடுக்கப்பட்டது.
கடைகளில் சோதனை
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை புதிய பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், நடராஜன் ஆகியோர் தலைமையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா? என சோதனை செய்தனர். மேலும் பொது இடங்களில் புகைபிடித்த நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.