கோவையில் பழங்கால வாகன கண்காட்சி


கோவையில் பழங்கால வாகன கண்காட்சி
x
தினத்தந்தி 7 Oct 2023 2:15 AM IST (Updated: 7 Oct 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பழங்கால வாகன கண்காட்சி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

வாகனங்கள்...

இன்றைய காலத்தில் மனித வாழ்வின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்குகின்றன.

ஆனால், பழங்காலத்தில் அவற்றை பார்ப்பதே அரிதுதான். அப்போதைய வாகனங்களை சினிமாக்களிலும், புகைப்படங்களிலும் மட்டும்தான் தற்போது பார்க்க முடிகிறது.

அதற்கு அடுத்தபடியாக, சில கண்காட்சிகளிலும் அவை காட்சிப்படுத்தப்படுகின்றன.

வாகன கண்காட்சி

அந்த வகையில், மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் 'கார் டிரைவ்-2023' என்ற பழங்கால வாகன கண்காட்சி, கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.டி. கார் அருங்காட்சியகத்தில் நேற்று காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

இதையொட்டி நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு, மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் செயலாளர் எம்.எஸ்.குகன் தலைமை தாங்கினார். கண்காட்சியில் அவருக்கு சொந்தமான, 1951-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட செவர்லெட் ஸ்டைல்லைன் என்ற கார் இடம் பெற்று இருந்தது. பச்சை நிறத்திலான அந்த கார், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஒரே இடத்தில்...

அதோடு கண்காட்சியில் 20 கார்கள், 10 இருசக்கர வாகனங்கள், படுக்கை வசதியுடன் கூடிய பஸ்(கேரவன்) ஆகியவை இடம் பெற்று இருந்தது. அவை சென்னை ஆலந்தூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் சேலத்தில் இருந்து கோவைக்கு வந்தன.

குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்குவார், டார்ஜ் பிரதர்ஸ், செவர்லெட், போர்டு, பியட், ஆஸ்டின், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் வாகனங்கள் இடம் பெற்றன.

இதுவரை சினிமாக்களிலும், புகைப்படங்களிலும் மட்டுமே பழங்கால வாகனங்களை பார்த்து ரசித்து வந்த பொதுமக்கள் ஒரே இடத்தில் அவை அணிவகுத்து நின்றதை ஆச்சரியத்துடன் நேரில் வந்து பார்வையிட்டு சென்றனர்.

'செல்பி' எடுத்து மகிழ்ச்சி

அதிலும், 1945-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சிட்ரோயன் ஹாட் ராடு கார், 1949-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பியூக் சூப்பர் யெய்ட் கார், 1951-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட செவர்லெட் கார், 1966-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வோக்ஸ்வாகன் கார் உள்ளிட்டவை பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அவர்கள் தங்களது செல்போனில் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அந்த வாகனங்களின் முன்பகுதியில் பெயர் மற்றும் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் அவற்றின் பழமையை அனைவரும் எளிதில் அறிந்து கொள்ள முடிந்தது.

இன்று நீலகிரியில்...

நிகழ்ச்சியில் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் தலைவர் பால்ராஜ் வாசுதேவன், துணைத்தலைவர் வி.எஸ்.கைலாஸ், பொருளாளர் விஜி ஜோசப், கமிட்டி உறுப்பினர்கள் சுமந்த் சகாந்தி, ரஞ்சித் பிரதாப், கே.எஸ்.மகேந்திரன், கண்ணன் எச்.குமார், ஏ.வி.எம். நிர்வாக பங்குதாரர் எம்.சரவணன், சுரேஷ் கிருஷ்ணா, மல்லிகா சீனிவாசன், விவேக் கோயங்கா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி மாவட்டம் ஊட்டி கார்டன் சாலையில் பழங்கால வாகன கண்காட்சி மற்றும் பேரணி நடைபெற உள்ளது. இதனை ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார் தொடங்கி வைக்கிறார். இதற்காக கோவையில் இருந்து நேற்று மதியம் பழங்கால வாகனங்கள் ஊட்டிக்கு அணிவகுத்து சென்றன. அவற்றை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

பார்வையாளர்களை கவர்ந்த பழங்கால 'கேரவன்'

இந்த கண்காட்சியில், அந்த காலத்தில் கேரவனாக பயன்படுத்தப்பட்ட படுக்கை வசதியுடன் கூடிய பஸ் ஒன்று சேலத்தில் இருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த பஸ்சின் சிறப்பம்சங்கள் குறித்து உரிமையாளர் ரஜினிகாந்த் கூறியதாவது:-

இந்த பஸ் 1934-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. முழுவதும் மரப்பலகைகள் மற்றும் இரும்பால் செய்யப்பட்டது. அதன் உரிமையாளராக ஆரம்ப காலத்தில் ஜமீன் ஒருவர் இருந்தார். கடந்த 30 ஆண்டுகளாக நான் உரிமையாளராக இருக்கிறேன்.

இந்த பஸ்சில் ஒரு குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் வரை பயணம் செய்யலாம். வீட்டில் இருப்பது போன்று படுக்கை வசதி மற்றும் கழிவறை வசதி உள்ளது. எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு லிட்டருக்கு 6 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும். 80 கிலோ மீட்டர் வரை வேகமாக செல்லலாம்.

அந்த காலத்திலேயே கேரவன் போன்று இந்த பஸ்சை பயன்படுத்தி உள்ளனர். தற்போது ஏ.சி. வசதியும் ஏற்படுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story