குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கடத்தல்


குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கடத்தல்
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கடத்தப்பட்டதாக சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் கோவில் உதவி ஆணையர் புகார் அளித்துள்ளார்.

தென்காசி

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கண்ணதாசன் நெல்லை சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டுக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் நிர்வாகம் தற்போது குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்துக்கும், பேரூராட்சி நிர்வாகத்துக்கும் இடையே வழக்கு நடைபெற்று நீதிமன்றங்களில் கோவிலுக்கு ஆதரவாக உத்தரவு வரப்பெற்றும், பேரூராட்சி நிர்வாகத்தினர் கட்டளை நிர்வாகத்தை ஒப்படைக்க நீதி பேராண்மை தாக்கல் செய்து அதிலும் கோவிலுக்கு அனுகூலமான தீர்ப்பு வந்துள்ளது.

இந்த கோவிலுக்கு சொந்தமாக குற்றாலம் செங்கோட்டை சாலையில் பெரிய கல்மண்டபமும், அதைச் சார்ந்த இடங்களும் உண்டு. இதில் கல்மண்டபத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்பு, பித்தளை, வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்ட விலை மதிப்புமிக்க பாத்திரங்கள் இருந்துள்ளது.

இந்த பழங்கால பொருட்களை பேரூராட்சி பணியாளர்கள் அந்த கல்மண்டபத்தில் இருந்து டிராக்டர் மூலம் கடத்தி சென்றுள்ளனர். இதுதொடர்பாக யூடியூப் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவி வருகிறது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு சொந்தமான பழங்கால விலை மதிப்புமிக்க பொருட்களை மீட்டுத்தருமாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story