குப்பை பிரச்சினைக்கு தீர்வே இல்லையா...?


குப்பை பிரச்சினைக்கு தீர்வே இல்லையா...?
x

குப்பைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் அருகே குவிக்கப்படும் குப்பைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திடக்கழிவு மேலாண்மை

பெருகி வரும் மக்கள் தொகை, வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை வளர்ச்சியின் அடையாளமாக கருதப்படுகின்றன. அதேநேரத்தில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவது சவாலான விஷயமாகவே உள்ளது.

இதற்கென குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலான ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிப்பகுதிகளில் இந்த திட்டம் முழுமையாக முடங்கியுள்ளது. அந்த வகையில் மடத்துக்குளம் பேரூராட்சிப்பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாததால் குவியும் குப்பை மலை மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பாழகும் விளை நிலங்கள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்க்கு அருகில் பேரூராட்சிப் பகுதியில் சேகரமாகும் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பையிலுள்ள கழிவுகள் மற்றும் பாலிதீன் கவர்கள் கால்வாய்க்குள் விழுந்து பாசன நீர் மற்றும் விளை நிலங்கள் பாழாகி வருகிறது. மேலும் அழுகும் கழிவுகளால் இந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த குப்பைகள் அடிக்கடி தீ வைத்து கொளுத்தப்படுகிறது.இதனால் இந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து பொதுமக்கள் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுமக்கள் மனு

குறிப்பாக இந்த பகுதியை ஒட்டியுள்ள கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் புகை மண்டலத்தால் திணறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் இந்த குப்பையில் எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் 3 நாட்கள் போராடி அணைக்கும் நிலை ஏற்பட்டது.

எனவே இந்த குப்பைகளை அகற்றவும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.மேலும் குப்பைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் மடத்துக்குளம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.



Next Story