போலீஸ் போல் நடித்து பணம் பறித்த வாலிபர் கைது
போலீஸ் போல் நடித்து பணம் பறித்த வாலிபர் கைது
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் போயம்பாளையம் அவினாசிநகரை சேர்ந்தவர் திவாகர் (வயது 29). பனியன் பிரிண்டிங் ஊழியர். இவர் கடந்த 20-ந்தேதி வேலை முடிந்து அவினாசிநகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது காக்கிநிற பேண்ட், டீ-சர்ட் அணிந்து வாலிபர் ஒருவர் திவாகரிடம், நான் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் என்றும், நீங்கள் குடிபோதையில் இருப்பதால் ரூ.500 அபராதம் வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த நபர் திவாகர் சட்டைப்பையில் இருந்த ரூ.250 மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு, மீதி பணத்தை கொடுத்து விட்டு வாக்காளர் அடையாள அட்டையை வாங்கிக்கொள் என்றும் கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் திவாகரின் நண்பர்கள் அங்கு வந்ததால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து திவாகர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இதில் போலீஸ் போல் நடித்து திவாகரிடம் பணம் பறித்த நபர் தேனி மாவட்டம் மேலப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்ற கார்த்திக் (34) என்பதும், தற்போது அவர் ஊத்துக்குளி வெள்ளியம்பாளையம் பகுதியில் வசித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று சுரேஷ் என்ற கார்த்திக்கை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது திவாகரிடம் போலீஸ் போல் நடித்து பணம் பறித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.