விதிகளை மீறி இயங்கும் கிரஷர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்


விதிகளை மீறி இயங்கும் கிரஷர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கும் கிரஷர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெரம்பலூர்

பா.ஜனதா மாவட்ட செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கும் கிரஷர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலின் சொத்துக்களை அரசு கையகப்படுத்துவதை நிறுத்தி, கோவிலுக்கு சொந்தமான கடைகள் மற்றும் சொத்துக்களை ஆக்கிரமிப்புகாரர்களிடம் இருந்து மீட்பதோடு, மிகவும் குறைந்த வாடகைக்கு விட்டிருப்பதையும் திரும்ப பெற வேண்டும்.

மாவட்டம் முழுவதும் கோவில்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் மாட்டிறைச்சி கடைகள் உடனடியாக அகற்ற வேண்டும். கல் குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் அனுமதிக்கப்பட்ட பாரத்தை விட 2 மடங்கு அதிகம் ஏற்றி வருவதை தடுக்க வேண்டும். கல் குவாரிகளை முறைப்படுத்தி கனிம வளத்தை காப்பாற்ற வேண்டும். அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகிறது. மக்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கவுல்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரதம மந்திரி மலிவு விலை வீட்டு வசதி திட்டமான அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதில் பயனாளிகள் குடியிருக்காமல் வீட்டை முறைகேடாக வேறு நபர்களிடம் விற்றுவிட்டதாக தெரிகிறது. இதை ஆய்வு செய்து உடனடியாக முறைகேட்டில் ஈடுபட்ட வீட்டின் உரிமத்தை ரத்து செய்வதோடு, அந்த வீடுகளை தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். பெரம்பலூர் நகரில் தினமும் காவிரி குடிநீர் வினியோகிக்கவும், குப்பைகளை தினமும் முறையாக அள்ளவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொளக்காநத்தம் கிராமத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story