மகளிர் உரிமைத்திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் :கலெக்டர் தகவல்


மகளிர் உரிமைத்திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் :கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையம் மூலம் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர்


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. இந்த விண்ணப்பதாரர்களின், விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு

கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராக செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேரங்களில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் வழி கள ஆய்வு அறிக்கையை பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.

கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராக செயல்படுவார். இணையதளம் வழியாக பெறப்படும் புகார்கள், மேல்முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும்.

உதவி எண்கள் வெளியீடு

எனவே பொதுமக்கள் இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மைய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகம்-04142 230652, 88257 89592, விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம்- 93610 38615, சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம்-79045 65724, கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம்- 8838939233 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

அதேபோல் கடலூர் தாலுகா அலுவலகத்தை 84388 93529 என்ற எண்ணிலும், பண்ருட்டி- 88387 43694, குறிஞ்சிப்பாடி- 70101 96368, சிதம்பரம்- 63804 12773, புவனகிரி- 63742 69250, காட்டுமன்னார்கோவில்- 74490 24450, ஸ்ரீமுஷ்ணம்- 73588 89879, விருத்தாசலம்- 63795 81415, திட்டக்குடி- 88072 07132 மற்றும் வேப்பூர் தாலுகா அலுவலகத்தை 90037 29862 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story