பெண் டிரைவர்கள் ஆட்டோ வாங்க மானியம் - தொழிலாளர் உதவி ஆணையர்

தமிழ்நாடு அமைப்புசாரா டிரைவர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்க , பெண் டிரைவர்கள் புதிதாக ஆட்டோ வாங்கும் செலவினத்தில் மானியமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லிங்கேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அமைப்புசாரா டிரைவர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் டிரைவர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுய தொழில் வாய்ப்பை உருவாக்கவும், அவர்களின் வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு, பெண் டிரைவர்கள் புதிதாக ஆட்டோ வாங்கும் செலவினத்தில் மானியமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவத்தை www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற 60 வயது பூர்த்தியடையாத பெண் டிரைவர்கள் தங்களது நலவாரிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன்கார்டு நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல், பேட்ஜ் எண்ணுடன் கூடிய டிரைவர் உரிம நகல், ஆட்டோ வாங்குவதற்கான அசல் விலைப்புள்ளி மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவற்றுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிட வளாகம், அண்ணா நெசவாளர் குடியிருப்பு, ஓரிக்கை காஞ்சீபுரம் என்ற முகவரியில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பித்து இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 044-29593177 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






