மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்
ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் தொம்பரெட்டி உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி மற்றும் அத்திப்பட்டு ஊராட்சி பொது வினியோக கடையில் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டமான கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமை இன்று கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 991 ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.
அதேபோல் ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளில் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறுகிறது. இதில் 5 ஆயிரத்து 964 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
விரைந்து முடிக்க உத்தரவு
அதில் 4 ஆயிரத்து 257 விண்ணப்ப பதிவு தற்போது வரை பதிவு செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரேஷன் அட்டை பதிவு செய்யும் பணியை விரைந்து முடித்திடவும் முகாமினை ஆய்வு செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விண்ணப்ப பதிவு செய்யும்பொழுது குடும்பத் தலைவியின் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு, செல்போன் எண், சொத்து விவரங்கள், மின் இணைப்பு விவரம் போன்றவற்றின் நகல்கள் குறித்த விவரங்களை முகாம் நடைபெறும் மையத்தில் தெரியப்படுத்த வேண்டும்.
அதன் பின்னர் அலுவலர்கள் ஒப்புதல் சீட்டு வழங்குவார்கள்.
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு முகாமில் வருவாய் துறையினர் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இணைந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
ஆய்வின் போது ஆரணி உதவி கலெக்டர் தனலட்சுமி, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார், ஜவ்வாதுமலை ஒன்றிய குழுத்தலைவர் ஜீவாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், தாசில்தார் மனோகரன், தனி தாசில்தார் வெங்கடேஸ்வரன், கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.