846 இடங்களில் விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது
சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற 846 இடங்களில் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
மகளிர் உரிமைத்தொகை
சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வினியோகம் செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் மாவட்டம் முழுவதும் 846 முகாம்களில் நேற்று தொடங்கியது.
இதில் டோக்கன் மற்றும் விண்ணப்பம் பெற்றுக்கொண்டவர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ளப்படி நேற்று முகாம்களுக்கு திரண்டு வந்தனர். இதற்காக அவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்தனர். அவர்களிடம் முதலில் ஆதார் எண் பதியப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
பின்னர் விரல் ரேகை பயோ மெட்ரிக் கருவி மூலம் சரிப்பார்க்கப்பட்டது. விரல் ரேகை சரியாக அமையாதவர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் விண்ணப்பங்களுக்கு ரசீது வழங்கப்பட்டது. இந்த பணியில் வட்ட வழங்கல் துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற முகாமை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் மற்றும் அதிகார்கள் உடன் இருந்தனர். முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது என்றும், இரண்டாம் கட்ட முகாம் வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடத்தப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.