மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் தொடங்கியது


மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் தொடங்கியது
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 7 தாலுகாவில் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் தொடங்கியது. முகாம்களில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார்

புதுக்கோட்டை

விண்ணப்ப பதிவு முகாம்கள்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுவதற்கான விண்ணப்பம், டோக்கன் கடந்த 20-ந் தேதி முதல் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முதற்கட்டமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 7 தாலுகாவில் இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம், டோக்கன் வினியோகிக்கப்பட்டன. தொடர்ந்து விண்ணப்ப பதிவு 7 தாலுகாவில் மொத்தம் 852 முகாம்கள் நேற்று முதல் தொடங்கியது. இதற்காக அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி கட்டிடங்கள், சேவை மையங்கள், அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தன்னார்வலர்கள்

டோக்கனில் குறிப்பிட்ட தேதியின் படி விண்ணப்பங்களை பதிய பெண்கள் அந்தந்த முகாம்களுக்கு வந்தனர். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றை எடுத்து வந்தனர். முகாம்களில் தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பதிவு நடைபெற்றது. ரேஷன் கார்டு எண், அவர்களது பெயர் விவரத்தை ஒரு நோட்டில் எழுதிக்கொண்டனர். மேலும் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என பாா்வையிட்டு படிவத்தை பூர்த்தி செய்தும் கொடுத்தனர். அந்த படிவத்தை மற்றொரு தன்னார்வலர் தனது செல்போனில் உள்ள செயலியில் பதிவேற்றம் செய்தார். மேலும் குடும்ப தலைவியின் விரல் ரேகை பயோமெட்ரிக் பதிவும் நடைபெற்றது. அதன்பின் அந்த படிவத்தை தன்னார்வலர்கள் பெற்றுக்கொண்டனர். விண்ணப்ப பதிவு முகாம் தொடர்ந்து வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த விண்ணப்ப பதிவு முகாம்கள் புதுக்கோட்டையில் ராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தர்மராஜ பிள்ளை நகராட்சி தொடக்கப்பள்ளி, பேரறிஞர் அண்ணா நினைவு தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றதை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய 5 வட்டங்களில் வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது.


Next Story