மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Sep 2023 7:20 AM GMT (Updated: 16 Sep 2023 11:03 AM GMT)

மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

செங்கல்பட்டு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 கண்காட்சிகள் அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம், சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி எதிர் வரும் 7.10.2023 முதல் 20.10.2023 வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெறவுள்ளது.

கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவு பொருட்கள் பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்ற பொருட்களும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு தேவையான கொலு பொம்மைகள், சிறிய வகை நினைவு பரிசுகள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் தயாரிக்கும் குழுக்களும் அரங்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் வருகிற 20-ந்தேதிக்குள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story