வீட்டில் இருந்தே விண்ணப்பங்களை பூர்த்திசெய்து வரவேண்டும்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகள் வீட்டில் இருந்தே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளை கணக்கெடுக்கும் சிறப்பு முகாம் வருகிற 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. பயனாளிகளை தேர்வு செய்ய ரேஷன் கடை பணியாளர்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று முகாமில் கலந்து கொள்ள வேண்டிய நாள், நேரம் குறித்த டோக்கன் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் விண்ணப்பங்களை தங்களுடைய இல்லங்களிலேயே விண்ணப்பங்களில் கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து முகாம் நடைபெறும் நாளில் வருகை தந்து விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியாளரிடம் வழங்கி செல்போன் செயலியின் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டிலேயே...
மிகவும் முடியாமல் உதவி தேவைப்படும் நபர்களுக்கு மட்டும் சிறப்பு முகாம் நடைபெறும் மையத்தில் தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அதன் பிறகு செல்போன் செயலியில் பதிவு செய்யப்படும்.
விண்ணப்பங்களை பெறும் அனைத்து பயனாளிகளும் தங்கள் இல்லங்களிலேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாமில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாமல் முகாமிற்கு வருகைதந்தால் பதிவு செய்ய காலதாமதம் ஏற்படும்.
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள உரிய நேரங்களில் மட்டுமே பயனாளிகள் வருகை தர வேண்டும். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படாமல் காலதாமதம் ஏற்பட்டால் மற்ற நேரங்களில் வரும் பயனாளிகளுடன் சேர்ந்து கூட்ட நெரிசல் ஏற்படும். எனவே இதனை தவிர்க்க பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.