தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் மானியம்
தோட்டக்கலைத்துறையின் சார்பில், விவசாயிகள் மானியம் பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்
சிவகங்கை,
தோட்டக்கலைத்துறையின் சார்பில், விவசாயிகள் மானியம் பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்
தோட்டக்கலை பயிர்கள்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 2023-2024-ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியினை ஊக்குவித்து, உற்பத்தியினை பெருக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கு ரூ.515.534 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, திட்ட இனங்களில் பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
பயன்பெறலாம்
இந்த திட்டத்தில் மா பரப்பு விரிவாக்கம், வீரிய ஒட்டு ரக காய்கறிகள் பரப்பு விரிவாக்கம், கொய்யா பரப்பு விரிவாக்கம், பப்பாளி பரப்பு விரிவாக்கம், பலா பரப்பு விரிவாக்கம், நெல்லி பரப்பு விரிவாக்கம், முந்திரி பரப்பு விரிவாக்கம், மல்லிகை மற்றும் கிழங்கு வகை பூக்கள் (சம்பங்கி) பரப்பு விரிவாக்கம், பழைய தோட்டங்கள் புதுப்பித்தல் (மா மற்றும் முந்திரி), பசுமைக்குடில் மற்றும் நிழல்வலை கூடம் அமைத்தல், தேனீ வளர்ப்பு, பண்ணைக்குட்டை அமைத்தல், சிப்பம் கட்டும் அறை அமைத்தல், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் ஆகிய திட்டங்களில் மானியம் பெற்று பயன்பெறலாம்.
இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு https://tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து சொட்டு நீர்பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.