விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி கூறியுள்ளார்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் வாயிலாக 5 குதிரைத்திறன் உள்ள மின்மோட்டார்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், 7.5 குதிரைத்திறன் உள்ள மின்மோட்டார்களுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் 10 குதிரைத்திறன் உள்ள மின்மோட்டார்களுக்கு ரூ.3 லட்சத்து வீதம், மற்றும் 10 முதல் 15 குதிரைத்திறன் உள்ள மின்மோட்டார்களுக்கு ரூ.4 லட்சம் மட்டும் ஒருமுறை கட்டணம் செலுத்தும் விண்ணப்பதாரர்களுக்கு, காத்திருப்பு முன்னுரிமை விலக்கி விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். எனவே ஏற்கனவே விவசாய மின் இணைப்பு வேண்டி பதிவு செய்துள்ள விவசாயிகள் சிறப்பு தட்கல் திட்டத்தில் பயனடைய தங்கள் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அனுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.