கூட்டுறவு பட்டய பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்; இணைப்பதிவாளர் தகவல்

தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு பட்டய பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி, இந்த ஆண்டு முதல் ஒரு ஆண்டு கால பயிற்சியாகவும், இரு பருவங்களாகவும் நடக்கிறது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற குறைந்தபட்சம் 17 வயது நிறைவு பெற்றவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. முழுநேர பயிற்சிக்கான மொத்த கட்டணம் ரூ.18,850. இப்பயிற்சிக்கான வகுப்புகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் வருகிற 18-ந்தேதி மாலை 5.30 மணி வரை தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடக்கிறது. ரூ.100 செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பதிவு தபால் அல்லது கூரியர் மூலம் வருகிற 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில், கூட்டுறவு பட்டய பயிற்சி, கணினி பயிற்சி, நகை மதிப்பீடு பயிற்சி ஆகிய பாடங்களுக்கும் சேர்த்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






