சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி கவுரவிக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனிநபர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் ஆகியோர்களுக்கு(3 பிரிவுகளுக்கு விருதுகள்) தனித்தனியாக முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2-வது பரிசு ரூ.10 ஆயிரம், 3-வது பரிசு ரூ.7,500 வழங்கப்படவுள்ளது. மேலும் சுற்றுச்சூழலில் சிறந்து மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரை பரிசுத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பபடிவம்
இவ்விருத்துக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் விண்ணப்பத்துடன் செயலாக்கத்தை உறுதிபடுத்தும் வகையில், துண்டுபிரசுரங்கள், ஊர்வலங்கள் மற்றும் நிழற்படங்கள் மற்ற அவசிய ஆவணங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் அதன் இணைப்புகள் நூலால் உறுதியாக தைக்கப்பட்டிருக்க வேண்டும். ஸ்டேப்ளர் பின் கொண்டு இணைக்ககூடாது. இணைக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கையை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைகள், விதிமுறைகள், விண்ணப்ப படிவங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குனரின் www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியில் வருகிற 15-ந் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு 044-24336421 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கடைசிநாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 6 நகல்களில் இயக்குனர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என்ற பெயரில் ரூ.100-க்கான காசோலையுடன் பாஸ்போட் அளவு போட்டோ-3 இணைத்து இயக்குனர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தரைதளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-600 015 என்ற முகவரிக்கு வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் தபால் மூலம் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.