உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

திருவாடானை தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.
தொண்டி,
திருவாடானை தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கணேசன் கூறியதாவது:- திருவாடானை தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்டம் 2011-ன் கீழ் ஏற்கனவே உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது அடையாள அட்டையில் குடும்ப தலைவர் இறந்து விட்டால் அதற்கான ஆவணங்களை கொடுத்து அந்த குடும்பத்தில் உள்ள அவரது மனைவி அல்லது அடுத்த வாரிசுதாரர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்தால் புதிதாக அட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதுவரை உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை நேரில் அணுகி இதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள உரிய படிவத்தினை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அவர்களது ஆதார் அட்டை நகல், குடும்ப கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் இணைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய விசாரணை மற்றும் மனு பரிசீலனைக்கு பின்னர் புதிய உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






