கடனுதவி திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் மூலமாக தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கறவை மாடு கடன், ஆட்டோ கடன் மற்றும் பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நுண்கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தேவைப்படும் கடன் விண்ணப்பங்களை திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து டாப்செட்கோ திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
விண்ணப்பிக்கும் போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து சாதி, வருமானம், பிறப்பிடம் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.