பிரதம மந்திரி கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


பிரதம மந்திரி கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 July 2023 12:51 AM IST (Updated: 26 July 2023 4:52 PM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

கல்வி உதவித்தொகை

2023-2024-ம் நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 3094 மாணவ- மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும்.

10-ந் தேதிக்குள்

https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 10-ந் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு

மேலும் 12.8.2023 முதல் 16.8.2023-ந் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு 29.9.23 அன்று நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களை பார்வையிடலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story