மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ்-2 துணை தேர்வு எழுதியவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு இன்று முதல் 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
பிளஸ்-2 துணை தேர்வு எழுதியவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு இன்று முதல் 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
துணை தேர்வு
சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற்ற பிளஸ்-2 இரண்டாம் ஆண்டு துணை தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கு உரிய விடைத்தாளின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த பின்பு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதே இணையதளம் முகவரியில் சென்று உரிய விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
கட்டணம்
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இன்று(வியாழக்கிழமை) 11 மணி முதல் வருகிற 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறு மதிப்பீட்டிற்கு கட்டணமாக பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505-ம், மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305-ம் மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205-ம் செலுத்த வேண்டும். கட்டணங்களை அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.