பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 14 Aug 2023 1:00 AM IST (Updated: 14 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநில விருது

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 24-ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி கடைசி நாளாகும்.

இந்த விருதுக்கு, டிசம்பர் மாதம் 31-ந் தேதியை தகுதி ஏற்புநாளாக கொண்டு, 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் சிறுமிகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல் வேண்டும். மேலும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி இருத்தல், ஆண்கள் மட்டும் சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.

ரூ.1 லட்சம்

குழந்தையின் பெயர், தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீரதீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும். மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தகுதிகளுடன் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story