முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டிலிருந்து 'முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது' ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது.
15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு 15-ந் தேதியன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில், தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது.
இவ்விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன :-
15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (2022-23) அதாவது 1.4.23 முதல் 31.3.23 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக (சான்று இணைக்கப்பட வேண்டும்).இருத்தல் வேண்டும்
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி மாலை 4 மணி ஆகும்.
விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in -ல் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்பித்தல் வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.