நவீன கருவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதாக கல்வி பயில்வதற்கு ஏதுவாக நவீன வாசிக்கும் கருவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதாக கல்வி பயில்வதற்கு ஏதுவாக நவீன வாசிக்கும் கருவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நவீன கருவி
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்பு பள்ளிகள், அனைத்து பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி கல்லூரிகளில் கல்வி பயிலும் பார்வைதிறன் குறைபாடுடைய மாணவர்கள் தங்களது கல்வி திறனை மேம்படுத்திட ஏதுவாக தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் இன்டர்நெட் ரேடியோ யு.எஸ்.பி. பென்டிரைவ் மற்றும் எஸ்டி. கார்டு சேமிக்கும் வசதி, தமிழ் உள்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி, நெட்வொர்க் இணைப்பு, வை-பை தவிர, மொபைல் போனின் ஹாட் ஸ்பாட் உடன் இணைக்கும் வசதி, டெய்சி புத்தகங்களை பதிவிறக்கம் செய்தல், மின் புத்தகங்களின் வீடியோக்கள் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி நேரடியாக பதிவிறக்கம் செய்தல், குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி, பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதாக தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் மற்றும் பி.டி.எப். உள்ளிட்டவற்றை எளிதாக படிக்கவும், பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் ஆகிய சிறப்பு வசதிகளைக் கொண்ட நவீன வாசிக்கும் கருவி பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
பயன்பெறலாம்
எனவே சிறப்பு பள்ளிகள் மற்றும் அனைத்து உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், யு.டி.ஐ.டி. அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 2, பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயில்வதற்கான கல்வி சான்று, பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் பெற்று சிவகங்கை புதிய பஸ் நிலையம் அருகில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.