சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்


சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர், பழங்குடியினர் சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் தாட்கோ திட்டத்தின் மூலம் 2022-2023-ம் நிதியாண்டுக்கு 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படுவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.90 ஆயிரம் மானியமும் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த ஒருவருக்கு ரூ.90 ஆயிரம் மானியம் என மொத்தம் 2 பேருக்கும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மானியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது 18 முதல் 65 வயதுக்குள் இருப்பவராகவும், ஜி.எஸ்.டி., பான் கார்டு, முகவரி சான்று இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது. மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்ட பின் சிமெண்டு முகவருக்கான விண்ணப்பங்கள் டான்செம் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை டான்செம் நிறுவனத்துக்கு செலுத்தப்படும்.

கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியமும், பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியமாக விடுவிக்கப்படும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஆதிதிராவிடர் பிரிவினருக்கு http://application.tahdco.com பழங்குடியினர் பிரிவுக்கு -http://fast.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரிக்கு மற்றும் 04151-225411 என்ற டெலிபோன் எண்ணிலோ அல்லது மாவட்ட தாட்கோ மேலாளர், மாவட்ட கலெக்டர் அலுவலகம்-606213 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story