அறநிலையத்துறையில் நீதிபதியை நியமித்தால் மாற்றங்களை காணலாம்: ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருந்தும் வருமானம் இல்லாத கோவிலாக கருதியது எப்படி? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
அறநிலையத்துறையில் நீதிபதியை நியமித்தால் ஒரே மாதத்தில் மாற்றங்களை காணலாம் என்று கருத்து தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கொண்ட கோவிலை வருமானம் இல்லாத கோவிலாக கருதியது எப்படி? எனவும் கேள்வி எழுப்பியது.
அறநிலையத்துறையில் நீதிபதியை நியமித்தால் ஒரே மாதத்தில் மாற்றங்களை காணலாம் என்று கருத்து தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கொண்ட கோவிலை வருமானம் இல்லாத கோவிலாக கருதியது எப்படி? எனவும் கேள்வி எழுப்பியது.
துணை கோவிலாக இணைப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கணேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களும் உள்ளன. இதில் ஏராளமான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலங்களை மீட்கும்பட்சத்தில் இவற்றின் மூலம் கோவிலுக்கு ஏராளமான வருமானம் கிடைக்கும். இந்த கோவிலை, எந்த வருமானமும் இல்லாத கோவில் என முடிவு செய்து திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இணைத்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.
இது ஏற்புடையதல்ல. எனவே விளாத்திகுளம் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இணைத்து அறநிலையத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஒரே மாதத்தில் மாற்றம்
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, விளாத்திகுளம் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் போதுமான வருமானம் இல்லாத காரணத்தினால்தான் அதை சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைத்து உள்ளனர். இதன் மூலம் துணைக்கோவிலின் வருமானங்கள் அனைத்தும் அவற்றின் முதன்மை கோவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். துணைக்கோவில் திருவிழா, அதிகாரிகளின் சம்பளம் போன்றவை முதன்மை கோவிலின் மூலம் வழங்கப்படும் என்றார்.
இதனையடுத்து நீதிபதிகள், "தமிழக இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பொறுப்பை நீதிபதி ஒருவரிடம் கொடுத்து பாருங்கள். ஒரே மாதத்தில் தமிழக கோவில்களில் ஏராளமான மாற்றங்களை பார்க்க முடியும்" என கருத்து தெரிவித்தனர்.
இணைப்பு நடவடிக்கைக்கு தடை
பின்னர், விளாத்திகுளம் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருக்கும்போது, வருமானம் இல்லாத துணை கோவில் என எப்படி முடிவு செய்யலாம்? இந்த கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சில மாதங்களுக்கு முன்பே ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்த உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்பில் இருந்து நிலங்களை மீட்காதது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த கோவில் நிலங்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட முழு விவரங்களையும் அறிக்கையாக அறநிலையத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த கோவிலை திருச்செந்தூர் கோவிலுடன் இணைத்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.