பொறுப்பாளர் பணிக்கு வேறுசமூகத்தை சேர்ந்தவரை நியமிப்பதா? அரசு பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர் மறுப்புகடலூர் அருகே பரபரப்பு


பொறுப்பாளர் பணிக்கு வேறுசமூகத்தை சேர்ந்தவரை நியமிப்பதா? அரசு பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர் மறுப்புகடலூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே காலை உணவு திட்ட பொறுப்பாளர் பணிக்கு வேறு சமூகத்தை சேர்ந்தவரை நியமிப்பதா? என்று கூறி அரசு பள்ளிக்கு மாணவர்களை பெற்றோர் அனுப்ப மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

நடுவீரப்பட்டு,

பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லை

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள சாத்தமாம்பட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 50 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டனர்.

அதற்கு அவர்கள், இப்பள்ளியில் காலை உணவு திட்ட பொறுப்பாளர் பணிக்காக வேறொரு சமூகத்தை சேர்ந்த 3 பேர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பணிக்கு ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் நடுவீரப்பட்டு போலீசார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோர் தரப்பில் காலை உணவு திட்ட பொறுப்பாளர் பணிக்கு ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற காரணங்களால் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது. ஆகையால் அனைத்து பள்ளி மாணவர்களையும் உடனடியாக பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அதிகாரிகள் மற்றும் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து நேற்று மதியத்திற்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர்.

இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story