சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பணிகளுக்கு கூடுதலாக 2 தனியார் ஏஜென்சிகள் நியமனம்


சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பணிகளுக்கு கூடுதலாக 2 தனியார் ஏஜென்சிகள் நியமனம்
x

சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பணிகளுக்கு கூடுதலாக 2 தனியார் ஏஜென்சிகள் நியமிக்கப்பட்டு உள்ளன. இதனால் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் விமானங்கள் தரை இறங்குவது, புறப்படுவது, விமான பயணிகளின் உடைமைகளை கையாள்வது போன்ற தரைதள பணிகளை தற்போது ஒரு தனியார் நிறுவனம் கையாண்டு வருகிறது.

கொரோனா காலம் ஓய்ந்து தற்போது விமான சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் தரைதள பணிகளை ஒரு நிறுவனத்தை வைத்து சமாளிப்பது கடினமாக உள்ளது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பணிகளுக்காக புதிதாக மேலும் 2 தனியார் ஏஜென்சிகளை இந்திய விமான நிலைய ஆணையகம் நியமித்து உள்ளது. தற்போது மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களில் பணிகளை செய்து வரும் 2 தனியார் ஏஜென்சிகளைேய சென்னை விமான நிலையத்திலும் நியமிக்கப்பட்டு உள்ளன.

இந்த புதிய ஏஜென்சிகளில் அதி நவீன கருவிகள் மற்றும் திறமையான பணியாளர்கள் இருப்பதாகவும், இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவது, புறப்படுவது போன்ற தரைதள பணிகள் இனிமேல் துரிதமாக நடக்கும். அதேபோல் விமான பயணிகளின் உடைமைகளை கையாளுவதும் அதிவேகமாக நடக்க இருப்பதால் இனிமேல் பயணிகள் நீண்டநேரம் விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய 2 ஏஜென்சிகளில் சுமார் 4 ஆயிரம் பேர் வரை பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் 4 ஆயிரம் பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

புதிதாக பணிக்கு வருபவர்களுக்கு பயிற்சிகள், பாஸ்கள், போலீஸ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை போன்ற அனைத்து நடைமுறைகளும் முடிந்து 2023-ம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் இவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது போன்றவைகள் அதிக தாமதம் இன்றி செயல்படும். பயணிகள் தங்களுடைய உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story