விரைவில் 1,021 டாக்டர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் நியமனம்
விரைவில் 1,021 டாக்டர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் நியமனம்
கோவை
தமிழகத்தில் 1,021 டாக்டர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஹெல்த்வாக் திட்டம்
தமிழகத்தில் ஹெல்த்வாக் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் கீழ் கோவையில் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி செய்யும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டனார்.இதற்காக அவர் கோவை ரேஸ்கோர்ஸ் முதல் வாலாங்குளம் வரை 8 கி.மீ. தூரத்திற்கு நடந்தே சென்றார். அப்போது அவருடன் தேசிய நலவழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஸ், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோரும் நடந்து சென்றனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கட்டண அடிப்படையில் நோயாளிகள் தங்கி இருந்து சிகிச்சை பெறுவதற்கு அமைக்கப்பட்டு உள்ள அறைகள் திறப்பு மற்றும் நர்சுகளுக்கு விஷமுறிவு சிகிச்சை குறித்த பயிற்சி, ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு மாரடைப்பு நோயாளிகளுக்கான மருந்து வழங்குதல் போன்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் செந்தில்பாலாஜி
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் தலைநகரிலும் 8 கிலோ மீட்டர் தூர நடைபாதை அமைத்து, அதன் இருபுறமும் மரங்கள், இருக்கைகள், மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருமுன் காப்போம் என்கிற அடிப்படையில் இந்த நடைபாதை அமைக்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் விரைவில் 38 மாவட்டங்களிலும் இந்த நடை பயிற்சிக்கான இடங்களை தொடங்கி வைப்பார். மாநிலத்திலேயே சிறந்த நடைபாதையாக 2.6 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக கோவை ரேஸ்கோர்ஸ் விளங்குகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்கான இதய பாதுகாப்பு மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி மதுக்கரை தாலுகா மலுமிச்சம்பட்டியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. ரூ.3 கோடியே 37 லட்சத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,206 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த இதய பாதுகாப்பு மருந்து இருப்பு வைக்கப்படும்.
நர்சுகளுக்கு பயிற்சி
பாம்பு கடி, நாய் கடியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான சிகிச்சை வழங்கப்படும். இதற்காக 30 ஆயிரம் நர்சுகளுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பயிற்சி அளிக்க உள்ளோம். மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கட்டண அடிப்படையில் அறை எடுத்து தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக 26 அறைகள் கொண்ட சிறப்பு வார்டு உள்ளது. இங்கு நாள்ஒன்றுக்கு சாதாரண அறைக்கு ரூ.1,200-ம், டீலக்ஸ் அறைக்கு ரூ.2 ஆயிரம், சூப்பர் டீலக்ஸ் அறைக்கு ரூ.3 ஆயிரம் என கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே சேலம், மதுரையில் இதுபோன்ற கட்டண அறை தொடங்கப்பட்டு உள்ளது.
பணி நியமன ஆணை
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் ஆஸ்பத்திரியில் 4 இடங்களில் ஹெல்ப் டெஸ்க் வாகனங்கள் நிறுத்தப்படும். இதில் உள்ள பணியாளர்கள் நோயாளிகள் மற்றும்அவர்களின் உறவினர்களுக்கு தேவயைான தகவல்களை அளிப்பார்கள். 18 ஆக இருந்த அரசு தலைமை ஆஸ்பத்திரிகள் கடந்த 2 ஆண்டில் 25 ஆஸ்பத்திரிகளாக உயர்ந்து உள்ளது. செவிலியர் பயிற்சி கல்லூரிகள் 6 இருந்தது. தற்போது புதிதாக 11 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவ துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் 1,021 டாக்டர்களை நிரப்ப நேர்காணல் நடத்த அழைப்பு கொடுத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் பொது தேர்வுக்கான முடிவு 15 நாளில் வெளிவரும். அதன் பின் 1021 டாக்டர்களும், 980 மருந்து ஆளுநர்களும் என ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு விரைவில் முதல்-அமைச்சர் பணி நியமன ஆணைகள் வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது டீன் நிர்மலா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.