வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 600 ஊழியர்கள் நியமனம்


வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 600 ஊழியர்கள் நியமனம்
x

சென்னையில் மெட்ரோ ரெயில் பணி நடக்கும் இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 600 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயிலின் 2-வது கட்டப்பணிகள் ஆங்காங்கே சாலைகளில் நடக்கிறது. இந்த பணிகள் நடக்கும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போதுமான போக்குவரத்து போலீசார் இல்லாததால், இதுபோல் நெரிசல் ஏற்படும் இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திண்டாடும் நிலை உள்ளது.

இந்த குறைகளை போக்க 600 ஊழியர்களை தற்காலிகமாக நியமிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்தது.

அதன்படி 600 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு போக்குவரத்து மார்ஷல்கள் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த போக்குவரத்து மார்ஷல்களுக்கு பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 52 மார்ஷல்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சிறப்பு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி முடிந்தவுடன் இவர்கள் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்று போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மார்ஷல் எனப்படும் ஊழியர்களை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர்தான் நியமித்துள்ளனர். அவர்களுக்கு சம்பளம் போன்றவற்றை மெட்ரோ ரெயில் நிர்வாகமே கொடுக்கும். நாங்கள் பயிற்சி மட்டுமே கொடுக்கிறோம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


Next Story