சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் மையத்திற்கு கூடுதல் பணியாளர்கள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு


சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் மையத்திற்கு கூடுதல் பணியாளர்கள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு
x

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் மையத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் தேசிய முதியோர் மையம் உருவாக்கப்படும் என்றும் அதற்கான நிர்வாக அனுமதியும் அளிக்கப்படுகிறது என்று மத்திய அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கிண்டியில் உள்ள கிங் மருத்துவ நிறுவன வளாகத்தில் இந்த மையத்தை அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை தமிழக அரசு 2016-ம் ஆண்டு வழங்கியது. இந்த மையத்திற்காக பல்வேறு நிலைகளில் 20 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கிடையே மத்திய அரசு ரூ.31 கோடி தொகையை வழங்கியது.

கூடுதல் நியமனம்

இந்தநிலையில் இந்த மையத்தில் கூடுதல் பொறுப்புகளை உருவாக்குவதற்காக அரசுக்கு மருத்துவக்கல்வி இயக்குனர் கடிதம் எழுதினார். அவரது கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்றுக்கொண்டு அதற்கான செலவாக ஆண்டுக்கு ரூ.9.63 கோடி தொகையை அனுமதித்து உத்தரவிடுகிறது.

அந்தவகையில் தேசிய முதியோர் மையத்திற்கு, உதவி நிலைய மருத்துவர், இருதயவியல், நரம்பியல், பல் மருத்துவர் எனப்பல்வேறு துறை மருத்துவர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், பிசியோ தெரப்பிஸ்ட்டுகள், லேப் டெக்னீசியன்கள், அலுவலக உதவியாளர்கள், லிப்ட் ஆபரேட்டர்கள் உள்பட பல பணிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் மருத்துவர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் என 53 பேர் நிரந்தரப்பணியின் அடிப்படையிலும், செவிலியர்கள், அலுவலக உதவியாளர்கள், லேப் டெக்னீசியன் என 203 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story