கொசுக்களை ஒழிக்க 681 பணியாளர்கள் நியமனம்
நாமக்கல் மாவட்டத்தில் கொசுக்களை ஒழிக்க 681 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தனிக்கவனம் செலுத்தி, 3 நாட்களுக்கு மேலாக தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் தேங்க கூடாது
மழைக்காலங்களில் மழை நீரானது வீடுகளை சுற்றிலும், வீடுகளின் மேற்பகுதிகளிலும் தேங்குவதற்கு வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் நன்னீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து உற்பத்தியாகும். எனவே, முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் போன்றவை இருப்பின் அவற்றில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியின் பின்புறம், தண்ணீர் தேங்குவதை கண்காணித்து தூய்மைபடுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் சேமிக்கும் சிமெண்டு தொட்டிகள், டிரம்கள், குடங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் புகுந்து முட்டையிடா வண்ணம் முழுமையாக மூடி வைத்து பாதுகாப்பாக பயன்படுத்திட வேண்டும்.
681 தற்காலிக பணியாளர்கள்
கொசு உற்பத்தியை தடுக்க 341 புகை அடிக்கும் எந்திரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளான பைரித்திரம் 239 லிட்டர், மாலத்தியான் 150 லிட்டர் மற்றும் டெமிபாஸ் 165.6 லிட்டர் கையிருப்பில் உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுத்திட, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கிராம மற்றும் நகர்புறங்களில் கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 681 தினசரி தற்காலிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.