இசை கல்லூரிகளில் கிராமிய கலைகளை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம் -அமைச்சர் தகவல்


இசை கல்லூரிகளில் கிராமிய கலைகளை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம் -அமைச்சர் தகவல்
x

இசை கல்லூரிகளில் கிராமிய கலைகளை பயிற்றுவிக்க பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

கோவை,

நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் சார்பில் உலக பொது இசை பறை மாநாடு -2023 கோவையை அடுத்த பேரூர் தமிழ் கல்லூரியில் நேற்று நடந்தது. மாநாட்டை பறை இசைத்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தமிழ்மொழியை மற்ற மொழி ஆக்கிரமிப்பில் இருந்து, பாதுகாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சியை எடுத்து வருகிறார்.

நாட்டுப்புற கலைகள், கலாசாரத்தை, பண்பாட்டை அறிந்து கொள்ளவும், இளைஞர்களுக்கு எடுத்துக்கூறும் விதமாகவும் கீழடி அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.

ஆசிரியர்கள் நியமனம்

வரலாற்றை தெரிந்து கொள்ளவும், நாட்டுப்புற கலையை பாது காக்கும் விதமாகவும் கலைஞர் நூற்றாண்டு விழா அமையும். நமது தொன்மையான அடையாளமான பறை இசையை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இசைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கலை, இசை கல்லூரிகளில் கிராமிய கலை பயிற்றுவிக்க பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டமன்றத்தில் அறிவித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் ரூ.11 கோடி ஒதுக்கீட்டில், கிராமிய கலைகள் பயிற்சி, வார இறுதி நாட்களில் 25 இடங்களில் பறை உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலாசாரம் மீட்டெடுப்பு

அதைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழர்களின் வாழ்க்கையில் எந்தளவு இசையை வளர்த்து உள்ளனர் என்பதை இந்த மாநாடு உணர்த்துகிறது. பறையை வைத்து மன்னர்கள் செய்தியை வெளிப்படுத்தியதுடன், கோவில் திருவிழாக்களிலும், சுப நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தி உள்ளனர். கலாசாரம், பண்பாட்டை, கலையை மீட்டெடுக்க வேண்டிய தலையாய கடமையை தமிழ் வளர்ச்சித்துறை மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். நம்முடைய பண்டைய கருவிகள், கலாசாரம் மீட்டெடுக்க இதுபோன்ற மாநாடுகள் ஒவ்வொரு கிராமத்திலும் நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சி அரங்கு

மாநாட்டையொட்டி தமிழர்களின் நூற்றுக்கணக்கான பண்டைய இசை கருவிகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார். அப்போது அவர் சில கருவிகளை இசைத்து மகிழ்ந்தார்.


Next Story