2,439 பேருக்கு பணி நியமன ஆணை


2,439 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 27 Nov 2022 1:15 AM IST (Updated: 27 Nov 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே தனியார் வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 2 ஆயிரத்து 439 பேருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.

சேலம்

கருப்பூர்:-

சேலம் அருகே தனியார் வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 2 ஆயிரத்து 439 பேருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 333 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்தனர்.

மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 26 ஆயிரத்து 82 பேர் கலந்து கொண்டனர். 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல் படித்தவர்கள் தங்களது கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

பணி நியமன ஆணை

தொடர்ந்து முகாமில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 439 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், சதாசிவம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் லதா வரவேற்று பேசினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்ற 2 ஆயிரத்து 439 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

68 இடங்களில் முகாம்

பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 1 லட்சத்து 8 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் படித்த மாணவர்கள் எளிதாக வேலை பெற வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் உடனடியாக தனியார் வேலைக்கு செல்வது சிரமம் என்பதால் நான் முதல்வன் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து அதற்கான இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அதில், இளைஞர்கள் எந்தந்த நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும், எவ்வாறு உதவித்தொகை பெற வேண்டும், பயிற்சி பெற்ற பிறகு பணிக்கு எப்படி செல்ல வேண்டும் என்ற முழு விவரங்களையும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் நடக்கும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாமை படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் மணி, பத்மாவணி மகளிர் கல்லூரி தாளாளர் கே.எஸ்.சத்தியமூர்த்தி, செயலாளர் துரைசாமி, கல்லூரி முதல்வர் அரிகிருஷ்ணராஜ், நிர்வாக அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story