444 உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்


444 உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்
x

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 17 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 444 உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

தமிழகத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, காலிப் பணியிடங்களை நிரப்புதல், புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒரு நாட்டினுடைய முன்னேற்றத்தை அந்த நாட்டில் வசிக்கும் பெண்களின் நிலையை வைத்து அறிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்ப மகளிருக்கு சொத்தில் சம உரிமை, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் மகளிர் மேம்பட மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

17 டி.எஸ்.பி.

இதனால் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். பெண்களின் மேம்பாட்டிற்காக இவ்வரசு முக்கியத்துவம் அளித்து வருவதால் பல்வேறு போட்டித்தேர்வுகளில் பெண்கள் அதிக அளவில் தேர்வு பெற்று அதிகாரம் மிக்க பதவிகளை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடங்களுக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 13 பேர் பெண் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 17 பேருக்கும் பணிநியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

444 எஸ்.ஐ.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு 311 ஆண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 133 பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 444 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக அவர்களில் 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பணிநியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு 1.3.2023 முதல் வண்டலூர், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் சீமா அகர்வால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story