மாணவர்களுக்கு பாராட்டு விழா
ஓசூரில் யோகாவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஓசூர்:
சென்னையில் கடந்த மாதம் 12-ந் தேதி யோகாசன உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஓசூரை சேர்ந்த மகா யோகம் ஜென்ஸ்கர் தற்காப்பு கலை மாணவ, மாணவிகள் சமகோண ஆசனத்தில் 1 மணி நேரம் 27 நிமிடம் 8 நொடிகள் அமர்ந்து சாதனை படைத்தனர். இவர்களுக்கான பாராட்டு விழா ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமதியில் நடந்தது. ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், டி.வி.எஸ்.மோட்டார்ஸ் தொழிற்சங்க தலைவர் ஆர்.குப்புசாமி, ஓசூர் மக்கள் சங்க தலைவர் சரவணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஜென்ஸ்கர் மகா யோகம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியில், யோகாசனம் பயிற்சி பெறும் மாணவர்கள் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர். பின்னர் யோகா உலக சாதனை படைத்த 10 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், மாணவ, மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் யோகா பயிற்சியாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.