"மதுரை மாணவியின் முதல் கேள்வியே 'கூக்ளி' பந்து வீச்சாக இருந்தது"


மதுரை மாணவியின் முதல் கேள்வியே கூக்ளி பந்து வீச்சாக இருந்தது
x

தேர்வுகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மதுரை மாணவியின் முதல் கேள்வியே கூக்ளி பந்து வீச்சாக இருந்தது என்று பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார்.

மதுரை

தேர்வுகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மதுரை மாணவியின் முதல் கேள்வியே கூக்ளி பந்து வீச்சாக இருந்தது என்று பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார்.

மதுரை மாணவி அஸ்வினி

தேர்வுகள் குறித்து பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமரிடம் முதல் கேள்வி கேட்கும் வாய்ப்பு, தமிழக மாணவிக்குதான் கிடைத்தது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திரிய வித்யாலாயா பள்ளியின் பிளஸ்-2 மாணவி அஸ்வினிதான் முதல் கேள்வியை கேட்டார்.

அவர் பிரதமர் மோடியிடம், "எங்களுடைய பெற்றோர் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு எங்களுக்கு சில நேரங்களில் மன உளைச்சலை தந்து விடுகிறது. நாங்கள் நன்றாக படித்தாலும், சில தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாமல் போய் விடுகிறது. நல்ல மதிப்பெண் எடுக்கும் எங்கள் மீது பலரும், அதிக மதிப்பெண் எடுப்பேன் என்று நம்பிக்கை வைத்து விடுகிறார்கள். அதனை நிறைவேற்ற முடியாமல் போகும் போது எங்களுக்கே மன பாதிப்பு ஏற்படுகிறது. அதனை எதிர்கொள்வது எப்படி?" என்றார்.

பிரதமரின் விளக்கம்

இந்த கேள்விக்கு பிரதமர் மோடி, மிகவும் அருமையான தெளிவான ஒரு விளக்கத்தை கொடுத்தார்.

''கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்தில் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள், பவுண்டரி, சிக்சர் என்று தங்களது விருப்பத்தை கூறிக் கொண்டே இருப்பார்கள். பலரும் அவர்களது ஆசையை பேட்ஸ்மேனிடம் கூறினாலும், பேட்ஸ்மேன் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற பந்தின் மீது மட்டுமே குறியாக இருக்க வேண்டுமே தவிர. மற்றவர்களுடைய எதிர்பார்ப்பை பற்றி கவலைப்படக்கூடாது. இருப்பினும் மற்றவர்கள் எதிர்பார்ப்பு தனக்கு ஒரு உந்துதல் ஆகவும் தூண்டுதலாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் தனது கவனம் முழுவதும் தன்னுடைய படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும்" என்று, பிரதமர் மோடி பதில் கூறினார்.

மாணவி பேட்டி

இந்த நிகழ்ச்சி குறித்து மாணவி அஸ்வினி கூறும் போது, "இந்தியா முழுவதும் மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.. அதனை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. நான் மத்திய அரசின் https://www.mygov.in/ என்ற இணையதளத்தில் ஆண்டுத்தோறும் மாணவர்களுக்காக நடத்தப்படும் கட்டுரை, ஒவியப்போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தேன். இந்தாண்டு கல்வி குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதனால்தான் வாய்ப்பு கிடைத்து என்று எண்ணுகிறேன்" என்றார்.

மாணவி அஸ்வினி, மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர். அவருடைய தந்தை சின்னச்சாமி, அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார். தாயார் விஜயலட்சுமி. இல்லத்தரசி.

டுவிட்டரில் பாராட்டு

இந்த நிகழ்ச்சிக்குப்பின் பிரதமர் மோடி, மதுரை மாணவியின் கேள்வி குறித்து தனது டுவிட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், கிரிக்கெட் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், முதல் கேள்வியே (மதுரை மாணவி) 'கூக்ளி' பந்து வீச்சாக இருந்தது என்று பெருமையாக கூறியிருந்தார். அதாவது கிரிக்கெட்டில் கூக்ளி பந்து என்பது, எவ்வளவு பெரிய பேஸ்ட்மேனாக இருந்தாலும் அவரை சற்று தடுமாற வைத்து விடும். அதே போல மதுரை மாணவியின் முதல் கேள்வி, தனக்கு சற்று தடுமாற்றத்தை கொடுத்து விட்டது என்ற தொனியில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Related Tags :
Next Story