மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அதன்படி அவர்கள் பேசிய விவரம் வருமாறு:-
பனைவிதைகள் வழங்க வேண்டும்
செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பங்கு தொகை இதுவரை வழங்கவில்லை. எனவே தொகையை பெற்றுத்தர வேண்டும். விவசாயிகளுக்கு பனை விதைகள் அதிகளவில் வழங்க வேண்டும். சிறுதானிய உற்பத்தி குழு கூட்டம் நடத்த வேண்டும். பிள்ளையார்குப்பம் கிராமத்தில் புதிதாக கிராம சந்தை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் புதிதாக அமைக்க வேண்டும்.
கோடை காலங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு தண்ணீர் அருந்துவதற்கு ஏற்ப குட்டையை தூர்வார வேண்டும். கள்ளக்குறிச்சி பகுதியில் மரவள்ளி தொழிற்சாலை அமைப்பது, மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு நானோ யூரியா மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஏரிகளிலும் சீமைகருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மக்காச்சோளத்துக்கு இழப்பீடு
மேலும் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக கல்வராயன்மலையில் எந்திர வாடகை மையம் அமைப்பது, நீர் நிலைகள் மாசுப்படும் வகையில் மணிமுக்தா ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பது, மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு வழங்குதல், முருகம்பாடி கிராமத்தில் துணை மின்நிலையம், பாசார் கிராமத்தில் புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும். மேலும், லாலாபேட்டை சந்தை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் பதிலளித்து பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஆராய்ந்து தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை-1மேலாண்மை இயக்குநர் அரவிந்தன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை-2 மேலாண்மை இயக்குநர் முருகேசன், கூடுதல் தலைமை பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் (பொறுப்பு) அருட்பெருஞ்ஜோதி, தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன், இணை இயக்குநர் கால்நடை பராமரிப்பு துறை (பொறுப்பு) ராஜேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.