ரூ.15,610 கோடி புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் -அமைச்சர் தகவல்


ரூ.15,610 கோடி புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் -அமைச்சர் தகவல்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் ரூ.15,610 கோடி மதிப்புள்ள புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது. காலை 11.05 மணிக்கு தொடங்கிய கூட்டம், பிற்பகல் 12.40 மணிக்கு முடிவடைந்தது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கவில்லை. எ.வ.வேலு அரசு பணி நிமித்தமாக டெல்லி சென்றிருந்தார். அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டுக்கு சென்றிருந்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட முதல் அமைச்சரவை கூட்டம் இது ஆகும்.

ஒப்புதல்

இந்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் 9-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். கவர்னர் ஆற்றும் உரை, நேற்று அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அது பற்றி அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதுதவிர பல்வேறு புதிய தொழில்கள், ஏற்கனவே உள்ள தொழில்களின் விரிவாக்கங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அது பற்றி தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி வருமாறு:-

புதிய தொழில்கள்

தொழில்துறையில் புதிதாக பெறப்பட்டுள்ள முதலீடுகளுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் புதிய தொழில் முதலீடுகளாக பல்வேறு பிரிவுகளில் ரூ.15 ஆயிரத்து 610.43 கோடி அளவிலான புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த புதிய 8 தொழில் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் 8 ஆயிரத்து 776 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒப்புதலையும் அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த தொழில் முதலீடுகள் பல்வேறு பிரிவுகளில் பெறப்பட்டுள்ளன.

தமிழகம் முதலிடம்

குறிப்பாக, மின்சார வாகனம் சம்பந்தப்பட்ட தொழில்கள், பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை, மின்சார வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கம்பியில்லா தொழில்நுட்பங்கள், ஜவுளி மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை போன்ற பிரிவுகளில் முதலீடுகள் செய்யப்படுகின்றன.

இந்த தொழில் முதலீடுகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக அமையும்.

ஏற்கனவே தமிழகத்தில் மின்சார வாகன கொள்கை அமலில் உள்ளது. தற்போதைய மின்சார வாகன தொழில்களுக்கு ஏற்றவகையில் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கான சாலை வரி செலுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. மின்சார வாகன உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதை தக்கவைப்பதற்கு ஏதுவாக அதற்கான கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. சில தொழில் கொள்கைகளுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

எந்த மாவட்டங்கள்?

தமிழகத்தில் பரவலாக புதிய தொழில்கள் வந்தாலும், குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அதன் அருகில் உள்ள போச்சம்பள்ளி உள்ளிட்ட சில பகுதிகளிலும் தொழில்கள் வருகின்றன. தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் புதிய தொழில்கள் அமையவுள்ளன.

தென் தமிழகத்தில் ஏற்கனவே பல தொழில் முதலீடுகள் வந்துள்ளன. கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி உள்ளிட்ட பல தொழில் முதலீடுகள் அங்குதான் வருகின்றன.

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வரும் நிலையில் அதுதொடர்பான தொழில்கள் அங்குதான் வரும். கங்கைகொண்டானில் டாடா பவர் திட்டம் உள்ளது. தோலில்லாத காலணி உற்பத்தியும் தென் தமிழகத்தை நோக்கித்தான் வருகிறது.

87 சதவீதம் வேலைவாய்ப்பு

பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள பகுதியையொட்டி ஏற்கனவே பல தொழில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்துள்ள மேலும் சில முதலீடுகள் அங்கு வருகின்றன. அங்கு விமான நிலையத்தை அமைப்பதற்காக அங்குள்ள மக்கள் கருத்துகளை கேட்டு, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளையும் அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எந்தெந்த நிறுவனங்கள் தொழில் தொடங்குகின்றன என்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யும்போது அறிவிக்கப்படும். உலகப் பொருளாதார மாநாடு, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சாதக அம்சங்கள் பற்றி எடுத்துரைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் 2010-ம் ஆண்டில் இருந்து தொடங்கியுள்ள தொழில் முதலீடுகள் மூலம் நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 87 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஆய்வு மூலம் தொழில்துறை கண்டறிந்துள்ளது. குறிப்பிட்ட தொழில் என்றல்லாமல், பரவலாக பல தொழில்கள் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story