பாதாள சாக்கடை இணைப்பு கட்டண உயர்வுக்கு ஒப்புதல்


பாதாள சாக்கடை இணைப்பு கட்டண உயர்வுக்கு ஒப்புதல்
x
தினத்தந்தி 1 July 2023 12:45 AM IST (Updated: 1 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை இணைப்பு கட்டண உயர்வுக்கு ஒப்புதல்

கோயம்புத்தூர்

கோவை

பாதாள சாக்கடை இணைப்பு கட்டண உயர்வுக்கு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் சீரான குடிநீர் வினியோகம் செய்ய கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள்.

மாநகராட்சி கூட்டம்

கோவை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடந்தது. மேயர் கல்பனா தலைமை தாங்கினார். ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள், குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:-

சிறுவாணி அணையை தூர்வார வேண்டும்

கார்த்திக் செல்வராஜ் (தி.மு.க.) :- பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல இடங்களில் சாலையோரத்தில் இருக்கும் மரங்கள் சாய்ந்து விழக்கூடிய நிலையில் இருக்கிறது. எனவே அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதுடன், மரக்கிளைகளை வெட்ட வேண்டும். மேலும் நடைபாதை வியாபாரிகளுக்கு தகுந்த இடத்தை வழங்க வேண்டும்.

அழகுஜெயபால் (காங்கிரஸ்):- கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது சிறுவாணி அணைதான். இந்த அணையில் 45 அடிக்கும் மேல் தண்ணீரை தேக்குவது இல்லை. இப்போது அணையில் ஒரு அடிக்கும் கீழ் தண்ணீர் சென்றுவிட்டது. 5 அடி முதல் 10 அடிவரை சகதிதான் காணப்படுகிறது. எனவே அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரபகுதியில் தெருநாய் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் காலை நேரத்தில் ஏராளமானோர் நடைபயிற்சி செய்து வருவதால் அங்கு நடமாடும் கழிவறை அமைக்க வேண்டும்.

நகர்நல மையம்

மாரிச்செல்வன் (சுகாதாரக்குழு தலைவர்) :- எனது வார்டில் ரூ.4 கோடியில் வளர்ச்சி பணிகள் கொடுத்ததற்கு நன்றி. மேலும் செட்டி வீதி பிரபுநகர் பகுதியில் புதிதாக நகர்நல மையம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் பொதுமக்கள் பலர் பயன்பெறுவார்கள்.

எம்.கிருஷ்ணமூர்த்தி (காங்கிரஸ்):- கோவை ஒண்டிப்புதூரில் இருந்து இருகூர் செல்லும் சாலையில் ராமச்சந்திரா நாயுடு பகுதியில் இருந்து சூர்யா நகர் செல்லும் பாதையில் மேம்பாலம் கட்ட 2011-ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் சில முக்கிய பிரமுகர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக மேம்பாலம் அமைக்கப்பட வில்லை. இதனால் சூர்யாநகர், காமாட்சி நகர், கண்ணன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மேம்பாலம் இல்லாததால் 3 கி.மீ. தூரம் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மேம்பாலம் கட்ட தீர்மானம் நிறைவேற்றி அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தெருநாய்கள் தொல்லை

சித்ரா வெள்ளியங்கிரி (ம.தி.மு.க.): மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தெருவிளக்குகள் ஒளிர்வது இல்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. பலரை கடித்தும் விடுகிறது. எனவே தெருநாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். வ.உ.சி. பூங்கா திடலில் தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்கிறார்கள். எனவே அந்த பகுதியை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

நவீன்குமார் (காங்கிரஸ்) :- அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கி உத்தரவிட்ட தமிழக கவர்னரின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நீக்கிய உத்தரவை சில மணிநேரத்தில் திரும்ப பெற்றுக்கொண்டு இருக்கிறார். கவர்னரின் இந்தசெயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனை அவர் பேசியதை வரவேற்கும் விதமாக அனைத்து கவுன்சிலர்களும் மேஜையில் கையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

பாம்புகள் நடமாட்டம்

இதுதவிர கவுன்சிலர்கள் மேயரிடம் மனுவும் கொடுத்தனர். அதில் சித்ரா தங்கவேல் கொடுத்த மனுவில், கொங்குநாடு கல்லூரி முதல் துடியலூர் ரெயில் நிலையம் வரை இருபுறமும் முட்புதர்கள் அதிகமாக இருக்கிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே அவற்றை அகற்ற வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்தில் பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம், வைப்புத்தொகைய உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் மாநகர பகுதியில் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் பலர் வலியுறுத்தனார்கள்.

(பாக்ஸ்) காலிக்குடங்களுடன் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்

மாநகராட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அ.தி.மு.க. கவுன்சிலர்களான பிரபாகரன், ரமேஷ், ஷர்மிளா சந்திரசேகர் ஆகியோர் காலிக்குடங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் மாநகர பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி விக்டோரியா ஹால் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பிரபாகரன் கூறும்போது, மாநகர பகுதியில் சில இடங்களில் 7 நாட்களுக்கு ஒருமுறையும், சில பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றார். பின்னர் 3 பேரும் கூட்டத்தில் பங்கேற்கசென்றனர்.

(பாக்ஸ்) தி.மு.க. பெண் கவுன்சிலரின் பதவி தப்பியது

மாநகராட்சி 97-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான நிவேதா தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்கவில்லை. இதனால் அவரை நீக்கம் செய்வது தொடர்பாக ஆணையாளர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரமுடியவில்லை. எனவே தன்னை மீண்டும் கவுன்சிலராக ஏற்றுக்கொள்ளும்படி கடிதத்தில் தெரிவித்து இருந்தார். நேற்று நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.எனவே அவருடைய வேண்டுகோளை கவுன்சிலர்கள் முடிவுக்கு வைக்கப்பட்டது. அவர்கள் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதால், அவர் தொடர்ந்து கவுன்சிலராக நீடிப்பார்.

(பாக்ஸ்) தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம்

மாநகராட்சி கூட்டம் வழக்கமாக திருக்குறள் வாசித்ததும், தீண்டாமை உறுதிமொழி ஏற்று தொடங்கும். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிவிட்டு கூட்டத்தை தொடங்க வேண்டும் என்று ம.தி.மு.க. கவுன்சிலர் சித்ரா தங்கவேல் மேயர் மற்றும் ஆணையாளருக்கு கோரிக்கை வைத்து இருந்தார். அதன்படி தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் திருக்குறள் வாசிக்கப்பட்டு தீண்டாமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.


Next Story