ஈரோடு மாநகரில் அனுமதி பெற்ற தற்காலிக பட்டாசு கடைகளில் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு


ஈரோடு மாநகரில் அனுமதி பெற்ற தற்காலிக பட்டாசு கடைகளில் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Oct 2023 5:28 AM IST (Updated: 22 Oct 2023 5:29 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகரில் அனுமதி பெற்ற தற்காலிக பட்டாசு கடைகளில் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு நடத்தினாா்

ஈரோடு

ஈரோடு மாநகரில் அனுமதி பெற்ற தற்காலிக பட்டாசு கடைகளில் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

திடீர் ஆய்வு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பட்டாசு உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்த விலையில் பட்டாசுகளை வாங்கி, அவற்றை அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து உரிமம் பெற்று சில்லரை விலையில் விற்பனை செய்யப்படும். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஆங்காங்கே உரிமம் பெற்ற பட்டாசு விற்பனையாளர்கள் கடை அமைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாநகரில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற்ற கடைகளில், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் தலைமையில் வருவாய் துறையினர், போலீசார், தீயணைப்பு துறை அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

ஆய்வு

ஈரோடு-நசியனூர் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடை, பழையபாளையம் சுத்தானந்தன் நகரில் உள்ள பட்டாசு கடைகள் உள்பட 4 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பட்டாசுகள் இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும் போதிய இடவசதிகள் உள்ளனவா?, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதா?.

தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுக்க போதிய தீத்தடுப்பான்கள், மணல், தண்ணீர் வசதி உள்ளதா?, மாவட்ட நிர்வாகத்தின் உரிமம் பெறப்பட்டுள்ளதா? என ஆய்வில் ஈடுபட்டனர். மேலும் பட்டாசு விற்பனையாளர்களிடம் பட்டாசுகளை விற்பனை செய்யும் போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றக்கோரி அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டனர்.

வழிகாட்டு நெறிமுறைகள்

ஆய்வு குறித்து தாசில்தார் ஜெயக்குமார் கூறும்போது, 'ஈரோடு தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 24 விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் வருவாய் துறை, தீயணைப்பு துறை, காவல் துறை சார்பில் ஆய்வு செய்து, உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி நெருங்கி வருவதால் உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என திடீர் ஆய்வு செய்தோம். தற்போது உரிமம் பெற்ற கடைகளில் பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கவில்லை. விற்பனைக்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர்' என்றனர்.


Next Story