அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த திறனறி தேர்வு திட்டம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த திறனறி தேர்வு திட்டம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த திறனறி தேர்வு திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சென்னை,

கிராமப்புறங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மீதான ஆர்வத்தை வளர்க்க செய்யும் நோக்கோடு பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி., 'அனைவருக்கும் சென்னை ஐ.ஐ.டி.' என்ற தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்தது.

இந்த திட்டத்தின் வாயிலாக கிராமப்புற பகுதிகளில் உள்ள 250 அரசு பள்ளிகளை அடையாளம் கண்டு, அந்த பள்ளிகளுக்கு தலா 10 கையடக்க மின்னணு பெட்டகத்தை (எலக்ட்ரானிக்ஸ் கிட்) சென்னை ஐ.ஐ.டி, இந்தியா எழுத்தறிவு திட்டம் என்ற தன்னார்வ அமைப்பு மூலமாக வழங்க முன்வந்துள்ளது.

இதன் தொடக்க நிகழ்வாக, அரசு பள்ளிகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் அறிவியல் சார்ந்த கருவிகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, பேராசிரியர்கள் சாரதி, அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

நிகழ்ச்சியில் 5 அரசு பள்ளிகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் அறிவியல் சார்ந்த பெட்டகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத்தொடர்ந்து மின்னணுவியல் செய்முறை குறித்த பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை-சென்னை ஐ.ஐ.டி. இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

4 ஆண்டு படிப்பு

இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மையான சென்னை ஐ.ஐ.டி. நிறுவனமானது, அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவக்கூடிய வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அறிவியல் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய வகையில் பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து உருவாக்கிய திட்டமே அனைவருக்குமே ஐ.ஐ.டி.எம். திட்டம்.

அரசு பள்ளி மாணவர்கள் நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்க தயார்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். எனது கனவு திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் தொடர்ச்சியாக, அந்த திட்டத்தின் முன்னெடுப்புதான் இது.

அந்த திட்டத்தை போல இதுவும் பயனுள்ள திட்டமாக அமைய போகிறது. அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். திட்டத்தின் முதல்கட்டமாக சென்னை ஐ.ஐ.டி.யில் 4 ஆண்டு படிப்பாக வழங்கப்படும்.

திறனறிவு தேர்வு திட்டம்

பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் படிப்பில் சேர தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 பேரில் 45 மாணவர்கள் அரசு-மாநகராட்சி பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். வானவில் மன்றம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் இயக்கம், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், புதுமைப்பெண் திட்டம், மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்ற ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவை அனைத்தும் சேர்ந்து கல்வித்துறையில் மாபெரும் அறிவு புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது.

இதுபோன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதல்-அமைச்சரின் திறனறிவு தேர்வு திட்டம் என்ற புதிய திட்டத்தை வெளியிட்டு தொடங்கி வைப்பதில் பெருமிதம் அடைகிறேன்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களது உயர்கல்வியை தொய்வின்றி தொடர்வதற்கும் உதவி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

மாதம் ரூ.1,000

இத்திட்டத்தின் படி 10-ம் வகுப்பு படிக்கும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என 1,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் அனைவருக்கும் சென்னை ஐ.ஐ.டி. போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களோடு தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, வழிகாட்டுதல் வழங்கப்படும். அவர்களின் 12-ம் வகுப்பை நிறைவு செய்யும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களின் இளங்கலை, முதுகலை படிப்புகளை தொடரும்போது ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

சென்னை ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்கள் அறிவாற்றலை மட்டுமல்ல, மன ஆற்றலையும் உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

கையடக்க மின்னணு பெட்டகத்தின் பயன்பாடு என்ன?

சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் அறிவியலில் ஆர்வத்தை தூண்டும் வகையில் கையடக்க மின்னணு பெட்டகத்தை (எலக்ட்ரானிக்ஸ் கிட்) நேற்று வழங்கியது. இந்த பெட்டகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் வரும் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பரிசோதனைகளையும் மேற்கொள்ள முடியும். இதற்காக முன்பு ஆசிரியர் பெரும் நேரத்தை செலவிட வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது அது மிகவும் எளிதாகிவிட்டது. கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை இந்த பெட்டகத்தில் மாணவ-மாணவிகள் மேற்கொள்ளலாம் என்கின்றனர். அந்தவகையில் 9-ம் வகுப்பில் இருந்து ஒரு மாணவர் தலா 25 பரிசோதனைகள் வீதம் பிளஸ்-2 வகுப்பு முடிப்பதற்குள் 100 பரிசோதனைகளை இந்த பெட்டகத்தின் மூலம் மேற்கொண்டு, எலக்ட்ரானிக்ஸ் அறிவியல் சார்ந்த விவரங்களை தெளிவாக தெரிந்துகொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒரு பெட்டகத்தின் விலை ரூ.10 ஆயிரம் என்று சொல்லப்படுகிறது. இதனை சென்னை ஐ.ஐ.டி., அரசு பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மாணவர்களும், ஆசிரியர்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.


Related Tags :
Next Story