ஆறடி பீமன் கோவில் திருவிழா


ஆறடி பீமன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 8 Feb 2023 7:00 PM GMT (Updated: 8 Feb 2023 7:01 PM GMT)

கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே ஆறடி பீமன் கோவில் திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே வனப்பகுதியில் ஆறடி பீமன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விவசாயம் செழிக்கவும், பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் தை மாதம் பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாமி கும்பிடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் பழங்குடியின மக்களின் குரவி கூற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பழங்குடியினர் நெருப்பின் மீது நின்றும் வனப்பகுதியில் உள்ள சாட்டைகள் போன்ற தாவரத்தை கொண்டு கை, கால் மற்றும் உடம்பில் அடித்து கொண்டும் பக்தர்களுக்கு குறி சொல்லினர்.

விழாவில் கொடைக்கானல் சுற்றுவட்டார மலைக்கிராம பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து சென்றும், அப்பகுதியில் செல்லும் ஆற்றினை கயிறு கட்டி கடந்து சென்றும் சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story