4 திசையிலும் வெவ்வேறு நேரத்தை காட்டும் ஆரணி மணிக்கூண்டு
ஆரணி பஸ் நிலையம் அருகே உள்ள மணிக்கூண்டு கெடிகாரம் 4 திசைகளிலும் 4 நேரத்தை காட்டியவாறு இயங்காமல் உள்ளது.
ஆரணி பஸ் நிலையம் அருகே உள்ள மணிக்கூண்டு கெடிகாரம் 4 திசைகளிலும் 4 நேரத்தை காட்டியவாறு இயங்காமல் உள்ளது. பல நாட்களாக பழுதடைந்து காணப்படும் இந்த கெடிகாரங்களை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்காதது அனைத்த தரப்பினரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
மணிக்கூண்டு
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே வருவாய் மிக்க நகராட்சியாக ஆரணி நகராட்சி உள்ளது. இந்த நகரின் அடையாளங்களில் ஒன்றாக ஆரணி மணிக்கூண்டு உள்ளது. 4 திசைகளில் இருந்து வரும் மக்கள் நேரத்தை அறிந்து கொள்வதற்காக 4 புறங்களிலும் கெடிகாரங்களுடன் இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டது. ஆனால் 4 ெகடிகாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தை காட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த மணிக்கூண்டு வரலாற்று சிறப்புமிக்கதாகும். தி.மு.க. அரசின் முதலாவது முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணாவால் 1967-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த மணிக்கூண்டு திறப்பு விழாவில் சுவாரசியமான விஷயம் நடந்தது. அப்போதைய நகரமன்ற தலைவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.சி.நரசிம்மனிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான கோதண்டபாணி பாகவதர் ஏன் விழாவுக்கு வரவில்லை என்று முதல்-அமைச்சர் அண்ணா கேட்டார். அவர் எதிர்க்கட்சி என்பதால் வரவில்லை என்று கூறப்பட்டது. காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை. அவர் வந்தால் தான் மணிக்கூண்டு திறக்கப்படும் என்று அண்ணா கூறினார். அதன்படி கோதண்டபாணி பாகவதர் மேடைக்கு வந்த பின்னரே மணிக்கூண்டை அண்ணா திறந்து வைத்தார். அப்பேற்பட்ட வரலாற்றுக்கு சொந்தமானதுதான் இந்த மணிக்கூண்டு. ஆனால் பல ஆண்டுகளாக இது பழுதடைந்து இயங்காமல் உள்ளது அனைத்து தரப்பினரையும் வேதனையடைய வைத்துள்ளது.
இயங்கவில்லை
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி நகரமன்ற தலைவராக இருந்த வி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த மணிக்கூண்டில் இருந்த அனைத்து உதிரிபாகங்களையும் மாற்றம் செய்து இயக்க நடவடிக்கை எடுத்தனர். அதுவும் சில மாதங்கள் மட்டுமே இயங்கப்பட்டது அதனைத்தொடர்ந்து வந்த தி.மு.க., அ.தி.மு.க. நகரமன்ற தலைவர்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நகருக்கும், தொகுதிக்கும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொண்டு வந்த நிலையிலும் மணிக்கூண்டை சீரமைக்கவில்லை. தற்போது தி.மு.க. நகரமன்ற தலைவராக மணி பணியாற்றி வருகிறார். ஒரு ஆண்டு ஆகியும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மணிக்கூண்டை இயங்க செய்து வெளியூர் பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நேரம் காட்டும் கருவியாக செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு வியாபார சங்க நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவன பொறுப்பாளர்களும் ஆரணி நகரமன்ற தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகிழ்ச்சி அடைவார்கள்
இதுகுறித்து ஆரணி பலசரக்கு மளிகை வியாபாரிகள் சங்க செயலாளர் டி.அருளாளன் கூறுகையில், ஆரணிக்கு அடையாளமாக பேரறிஞர் அண்ணாவால் திறந்து வைக்கப்பட்ட மணிக்கூண்டை இயக்க செய்தால் வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும், ஆட்டோ டிரைவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
சமீப காலமாக கைக்கெடிகாரம் அணிவது மறந்துவிட்ட நிலையில் தற்போது இளைஞர்கள் கைக்ெகடிகாரம் கட்டும் பழக்கத்துக்கு மாறி உள்ளனர். அதேபோல நேரம் அவசியம். கடந்து சென்றால் மீண்டும் வராத நேரத்தை நாம் அறிந்து கொண்டு செயல்பட இந்த மணிக்கூண்டு கெடிகாரம் உதவியாக இருக்கும். எனவே, மணிக்கூண்டை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.