சோழர் ஆட்சி கால சாட்சியாக திகழும் நாகை


சோழர் ஆட்சி கால சாட்சியாக திகழும் நாகை
x
தினத்தந்தி 12 March 2023 12:30 AM IST (Updated: 12 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் இருந்த புத்த விகாரில் ராஜராஜ சோழனுக்கு துறவிகள் சிகிச்சை அளித்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ள. இதுதொடர்பான வரலாற்று உண்மைகளை அறிய கோர்ட்டு வளாகத்தில் உள்ள சுரங்கப் பாதையை திறந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுமா? என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

நாகப்பட்டினம்

நாகையில் இருந்த புத்த விகாரில் ராஜராஜ சோழனுக்கு துறவிகள் சிகிச்சை அளித்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ள. இதுதொடர்பான வரலாற்று உண்மைகளை அறிய கோர்ட்டு வளாகத்தில் உள்ள சுரங்கப் பாதையை திறந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுமா? என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

சோழ சாம்ராஜ்யம்

உலகம் முழுவதும் ஆட்சி செலுத்திய சாம்ராஜ்யங்களுள் சோழ சாம்ராஜ்யத்துக்கு என்று தனி இடம் உண்டு. பொன்னி (காவிரி) நதி பாயும் இடங்கள் மட்டுமின்றி கடல் கடந்தும் சோழ சாம்ராஜ்யம் நீண்டிருந்தது.

சோழர்கள் ஆண்ட காலத்தை பற்றிய வரலாறு முழுமை பெறாமல் ஆங்காங்கே கேள்விக்குறிகளாக நீடிக்கிறது. எகிப்து, ரோம் போன்ற பழங்கால சாம்ராஜ்யங்களை பற்றிய வரலாற்று உண்மைகள் அழுத்தம், திருத்தமாக எழுதப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மண்ணின் மைந்தர்கள் பற்றிய வரலாற்று உண்மைகள் மட்டும் சந்தேகங்களாக நீடித்து வருவது வேதனை அளிப்பதாக வரலாற்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். பிற்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் சோழர் வரலாற்றை தெளிவுபடுத்த வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சோழர் ஆட்சியின் சாட்சி

சோழர் காலத்தில் நாகையில் துறைமுகம் இயங்கி வந்தது. சங்க காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கிய பூம்புகாரைப்போல பல தொல்லியல் சிறப்புகள் நாகை நகரில் புதைந்துள்ளன. சோழர் ஆட்சியின் சாட்சியாக திகழும் நாகையில், கீழடியை போல தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டால் பல வரலாற்று உண்மைகள் புலப்படும்.

தொல்லியல் ஆய்வுகளின் மூலம் நாகை நகரை பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்த முடியும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

நாகையில் புத்த விகார்

நாகையில் கி.பி.10 முதல் 13-ம் நூற்றாண்டு வரை பிற்கால சோழர்களின் ஆட்சி காலத்தில் புத்தம், சமண சமயங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் சூடாமணி விகார் என்ற புத்த விகாரைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த விகார் நாகையில் தான் இருந்தது என்பது ஆனைமங்கலம் செப்பேடு (லைடன் பல்கலைக்கழக செப்பேடு) மூலம் அறியலாம்.

இன்றைய இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகியவை ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் என்று கி.பி. 10-ல் இருந்து 13-ம் நூற்றாண்டு வரை அழைக்கப்பட்டு வந்தது.

ராஜராஜசோழனிடம் அனுமதி கேட்டார்

இந்த சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான கிடாரம் என்கின்ற (தற்கால வடக்கு மலேசியா) பகுதியின் அரசாங்க அதிகாரியான அரையன் ஸ்ரீ விஜயோதுங்கவர்மன் என்பவர் பிற்கால சோழ சாம்ராஜ்யத்தின் மாமன்னரான முதலாம் ராஜராஜசோழனை தஞ்சை அரண்மனையில் நேரில் சந்தித்து, 'எங்களுடைய கிடாரத்து வணிகர்கள் வியாபாரத்துக்காக சோழ நாட்டின் நாகை துறைமுகத்துக்கு வந்து இறங்கும்போது, அங்கு பாதுகாப்பாக தங்குவதற்கும், புத்த மதத்தை சார்ந்த நாங்கள் வழிபடுவதற்கான இடத்தை அமைத்துக் கொள்வதற்கும் அனுமதி வேண்டும்' என கேட்டுள்ளார்.

சூடாமணி புத்த விகார்

அவருடைய கோரிக்கையை ஏற்று மாமன்னர் ராஜராஜ சோழன், நாகையில் கிடாரத்து வணிகர்கள் தங்குவதற்கும், புத்த விகார் கட்டிக் கொள்வதற்கும் அனுமதி அளித்தார். இதையடுத்து விஜயோதுங்கவர்மன், கி.பி. 1005-ம் ஆண்டு நாகையில் புத்த விகாரை கட்டி, அதற்கு அவரது தந்தை பெயரான சூடாமணி வர்ம விகார் என்று பெயரிட்டார்.

இந்த புத்த விகார், நாகையில் தற்போது உள்ள பழைய கோர்ட்டு வளாகத்தில் கட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக ஆனைமங்கலம் செப்பேட்டில் குறிப்புகள் உள்ளது என வரலாற்று ஆர்வலர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர். ராஜராஜ சோழன் எனும் அருண்மொழிவர்மன் உடல் நலம் குன்றி இருந்தபோது சூடாமணி புத்த விகாரின் கீழ் நிலவறையில் (சுரங்க அறை) புத்த துறவிகள் அவருக்கு சிகிச்சை அளித்ததாக பொன்னியின் செல்வன் கதையில் கூறப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை மூடல்

இது குறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறும்போது:-

நாகை பழைய கோர்ட்டு கட்டிடத்தின் வடகிழக்கு அடித்தள பகுதியில் சுரங்க அறைகளுக்கு செல்ல 2 பாதைகள் இருந்தன. விஷ ஜந்துக்கள் இருப்பதாக எழுந்த அச்சத்தின் காரணமாக அந்த 2 பாதைகளும் 1970-ம் ஆண்டு வாக்கில் மூடப்பட்டுள்ளன. இதை நாகையில் வசிக்கும் முதியவர்களிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.

நாகை பழைய கோர்ட்டு புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு, தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு சுரங்க அறைகளுக்கு செல்ல 2 பாதைகளும் இருப்பது தெளிவாக தெரிகிறது. கட்டிட புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுரங்கப்பாதைகளை திறந்து தொல்லியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும்.

அவ்வாறு ஆய்வு செய்வதன் மூலம் ராஜராஜ சோழன் சிகிச்சைக்காக தங்கி இருந்த அந்த சுரங்க அறையையும், அதுதொடர்பான வரலாற்று தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் அந்த சுரங்க அறையை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கலாம். அங்கு சோழர் கால அருங்காட்சியகம் அமைத்தால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

உண்மை தெரியவரும்

தொல்லியல் துறையும், கட்டுமான பொதுப் பணித்துறையும் (புராதான சின்னங்கள்) இணைந்து நாகை பழைய கோர்ட்டு கட்டிடத்தின் வடகிழக்கு அடித்தள பகுதியில் மூடப்பட்ட சுரங்கப்பாதையை திறந்து ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போது தான் ராஜராஜ சோழனுக்கு சிகிச்சை நடந்த சூடாமணி புத்த விகாரின் நிலவறை குறித்த உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'நேரில் பார்த்திருக்கிறேன்'

நாகையை சேர்ந்த திருப்பதி வெங்கடாசலம் (வயது83) கூறும்போது:-

பொன்னியின் செல்வன் கதையில் ராஜராஜ சோழனுக்கு சூடாமணி விகாரில் உள்ள நிலவறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு நாகை பழைய கோர்ட்டு கட்டிடத்தின் வடகிழக்கு அடித்தள பகுதியில் சுரங்க அறைகளுக்கு செல்லும் 2 பாதைகள் இருந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். காலப்போக்கில் பாதுகாப்பு கருதி அந்த 2 பாதைகளையும் அடைத்து விட்டனர். தற்போது அந்த கட்டிடத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளின் போதே அடைக்கப்பட்ட 2 பாதைகளையும் திறந்து பார்க்கலாம். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புனரமைக்கப்படும் இந்த கட்டிடத்தில், அருங்காட்சியகத்தை நிறுவி, மாவட்டத்திலுள்ள சோழர் காலத்து வரலாற்று பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வரலாற்றை மூடி மறைக்க கூடாது

நாகை பழைய ேகார்ட்டில் நடந்து வரும் பராமரிப்பு பணியில், வரலாற்றுச் சின்னங்கள் மறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நாகையின் வரலாற்றை மூட மறைக்க கூடாது. எனவே முறைப்படி ஆய்வு செய்து மறைக்கப்பட்ட சோழர்கள் ஆட்சி கால ஆதாரங்களை வெளிப்படுத்த ேண்டும் என்பதும் வரலாற்று ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story