ஆற்காடு நகர அ.தி.மு.க. செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
ஆற்காட்டில் அஞ்சலக முத்திரையைதவறாக பயன்படுத்திய அ.தி.மு.க. நகர செயலாளர் உள்பட 6 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெண்டர் தபால்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி டெண்டர் சம்பந்தமான தபாலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அஞ்சல் அலுவலக ஊழியர், நகராட்சியில் உள்ள தகவல் மையத்தில் கொடுத்துவிட்டு பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து தபால் அலுவலக துப்புரவு பணியாளர் பிச்சை என்பவர் அஞ்சல் துறை முத்திரையிட்ட ஒரு கடிதத்தை எடுத்து வந்து நகராட்சி தகவல் மையத்தில் கொடுத்துள்ளார்.
அப்போது சிறிது நேரத்திற்கு முன்புதான் தபால்கள் கொடுக்கப்பட்டு பதிவேட்டில் கையொப்பம் பெற்று சென்றனர். மீண்டும் எதற்கு தபாலைகொண்டு வருகிறாய் பதிவேடு எங்கே என கேட்டுள்ளனர். உடனே அவர் கடிதத்தை கொடுக்காமல் எடுத்துச் சென்றுள்ளார்.
6 பேர்மீது வழக்கு
அதன் பின்னர் அ.தி.மு.க.வை சேர்ந்த நபர் அந்த தபாலை மீண்டும் தகவல் மையத்தில் கொடுத்ததாக தெரிகிறது. இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக அறிந்து தபால் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அரக்கோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கரன் ஆய்வு செய்தார். அதில் தபால் அலுவலகத்தில் வேலை செய்யும் சிறு சேமிப்பு ஏஜென்டு ஜெய்சிங், துப்புரவு தொழிலாளர் பிச்சை ஆகியோர் பணத்தை பெற்றுக் கொண்டு அஞ்சலக முத்திரையை தவறுதலாக பயன்படுத்தி அந்த கடிதத்தை நகராட்சியில் கொடுக்க முயன்றது தெரியவந்தது.
இவர்கள் இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து ஆற்காடு நகராட்சி பொறியாளர் கணேசன் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இதில் தொடர்புடைய அ.தி.மு.க. நகர செயலாளர் சங்கர், பிச்சாண்டி, ராஜேஷ் குமார், சேதுராமன் மற்றும் அஞ்சலக ஊழியர்கள் ஜெய்சிங், பிச்சை ஆகிய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.