ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
ரிஷிவந்தியம்,
பிரம்மோற்சவ விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் மிகவும் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஜூன் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகளும், வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கடந்த 29-ந்தேதி அர்த்தநாரீஸ்வரருக்கும், முத்தாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தேரோட்டம்
நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகத்துடன் உச்சிகால பூஜைகள் முடிந்து, சர்வ அலங்காரத்துடன் புறப்பட்ட பஞ்சமூர்த்திகளுக்கு கோவில் முன்பு மண்டகப்படி பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட 52 அடி உயர திருத்தேரில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளினார். அதன்பிறகு முருக மூப்பர் வகையறாவினர் தலைமையில் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன், அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், துணைத் தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை மற்றும் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மாலை 6 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.
பக்தர்கள் சாமி தரிசனம்
விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரி உற்சவமும், நாளை (திங்கட் கிழமை)விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது. திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் தலைமையில் ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விழாவில் ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.